ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பயணித்த அரசாங்கத்திற்கு சொந்தமான கெப் வண்டி, நேற்று சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் விபத்துக்கு உள்ளானது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால், கெப் வண்டி வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள வீடொன்றின் மீது புகுந்துள்ளது.
இதில், வாகனமும், வீடும் சேதமடைந்துள்ளதுடன், ராஜாங்க அமைச்சரின் மகன் காயமடைந்துள்ளார்.
வாகன விபத்தின் போது, காயமடைந்த ராஜாங்க அமைச்சரின் மகன் சிலாபம் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், பின்னர் அவர் தனது விருப்பத்தின் பேரில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், வாகன விபத்து ஏற்படும் போது ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் மதுபோதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதனால், குறித்த விடயத்தை நீதிமன்றத்தில் முன்வைத்து, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.