நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள் : இலங்கையில் நடந்த விசித்திரம்!!

632

கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். அதன் பின்னர் வங்கியைக் கொள்ளையிடுமாறு பணித்தார். அதன் அடிப்படையில் நான் வங்கியைக் கொள்ளையிட்டேன். இன்று நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்லுமாறு கடவுளே பணித்தார்.” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் இந்த கூற்றின் ஊடாக கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அடங்கிய அறை உடைத்தது யார் என்பது அம்பலமாகியுள்ளது.

நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் களவாடப்பட்டிருந்தது.

கிரியல்ல பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் கொள்ளையிட முயற்சித்த போது இந்த சந்தேக நபரை பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக கடந்த 3ம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் சந்தேக நபரை பிடித்து நீதிமன்றில் மீளவும் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

கடவுளின் உத்தரவிற்கு அமைய தாம் இவ்வாறு கொள்ளையிட்டதாக குறித்த நபர் நீதவானின் எதிரில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கிலிருந்து தப்பித்து கொள்ள குற்றவாளி வெளிப்படுத்திய தகவல்கள், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.