மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.
இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அபிமன்யூவிடம் வார இறுதி நாள்களில் சொந்த ஊருக்குப் பேருந்தில் செல்லக்கூட காசு இருக்காது. பல நேரங்களில் காய்கறி லாரிகளில்தான் அபிமன்யூவின் சொந்த ஊர் பயணம் அமையும்.
இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிய அபிமன்யூவுக்கு எதிரிகள் அதிகரித்தனர்.
‘மதவாதத்தை வோறோடு அறுப்போம்’ என்று கோஷமிடும் அபிமன்யூ, மதவாதிகளுக்கு எதிரிகளானார். இந்திய மாணவர் சங்கமும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளை அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரி சுவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று எழுதியுள்ளனர்.
அப்போது, கேம்பஸ் ஃப்ரன்ட் அமைப்பினர் எழுதிய சுவர்களில் அபிமன்யூ, மதவாத கேம்பஸ் ஃப்ரன்ட் என்று மாற்றி எழுதியிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.
கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.
கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், “மதவாதிகளுக்கும் மதத்தை காரணம் காட்டி கத்தியை எடுப்பவர்களும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். இவர்களை அப்புறப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் ” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.