வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06.07) பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்களுக்கு தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுச் செயலமர்வு ஒன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
அண்மையில் வவுனியா குளங்களில் சட்டவிரோதமான தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றவர்களை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். எனவே சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
தேசிய உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வவுனியா குளங்களில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளின் பாவனையைத் தடுப்பது தொடர்பான செயலமர்வில் வவுனியாக்குளம், பாவற்குளம், கல்மடு, மடுக்கந்த, போகெஸ்வெவ, ஈரப்பெரியகுளம் போன்ற பகுதியிலுள்ள மீனவர்கள் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வில் வளவாளர்களாக சமுத்திர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ரத்தினதிலக கலந்துகொண்டு தடை செய்யப்பட்ட வலைகள் தொடர்பாகவும் புதிய மீன்பிடி முறைமைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
நேற்றைய நிறைவு தினத்தில் இச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து மீனவர்களுக்கும் தலா இரண்டு நூல் வலைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை தமது அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கு மாற்றீடாக வலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.