அனுராதபுரத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்!!

496

அனுராதபுரம் வன்னியன்குளம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை உட்பட 5 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அனுராதபுரம் தீபானி கல்லூரிக்கு அருகில் ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொலை செய்யப்பட்ட சுஜீவ பிரசன்ன என்பவரின் கொலை தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றின் போது, சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட நபரின் தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரின் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இது சம்பந்தமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புல்லையார் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பானது.

இந்த சம்பவத்தில் ஒரு தரப்பை நிராபராதிகள் என்று கூற முடியாது. இரண்டு தரப்பினருக்கும் எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை செய்யப்பட்டவருக்கு எதிராக ஏனைய நான்கு வழக்குகளில் ஒரு வழக்கு புள்ளையார் சமிந்த என்பவரை வெட்டி காயப்படுத்தியமை தொடர்பானது.

எது எப்படி இருந்த போதிலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எவ்விதமாக அரசியல் குறுக்கீடுகளும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.