வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும் மற்றும் ஊடக மையமும் நேற்று (15.07) மாலை 4 மணிக்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் சங்கத்தின் தலைவருமான பி.மாணிக்கவாசகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
செய்தியாளர் மாநாடு மற்றும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்துவதற்கான ஒரு மத்திய நிலையமாக வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமானது இயங்கவுள்ளது.
அந்தவகையில் அலுவலகத்திற்கான மத அனுஸ்டான நிகழ்வுகள் ஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்று சிரேஸ்ட ஊடகவியலாளர்களான பி.மாணிக்கவாசகம் மற்றும் டி.ரத்துகமகே ஆகியோரால் ஊடக மையமானது வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அக வணக்கத்தை தொடர்ந்து அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் அலுவலக திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இவ் அலுவலக திறப்பு விழாவிற்கு வவுனியா நகரத்தின் பிரபல வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உதவியுள்ளதுடன் நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம்,
சமூக வலைத்தளங்கள் பெருகியதன் காரணமாக ஊடகங்கள் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளன. ஊடகவியலாளர்கள் ஒரு சங்கமாக ஒன்றிணைந்து செயல்ப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகவியலாளர்கள் தொழில் ரீதியாக தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதற்கும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் இந்த சங்கம் அவசியமானதாக இருக்கிறது என தெரிவித்தார்.