நிரந்தர நியமனம் தொடர்பாக அறிவிப்புக்கள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை!!

767

வடமாகாண சபையிலிருந்தோ அல்லது வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சின் அலுவலகத்திலிருந்தோ எமது நிரந்தர நியமனம் தொடர்பாக எழுத்து மூலமான அறிவிப்புக்கள் எதுவும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் எமது நிரந்தர நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு வட பகுதியிலிருந்து 50 பேர் கடந்த 18, 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தோம்.

எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாட முடியவில்லை. அதற்கு பதிலாக 19ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளருடனும், பிரதி செயலாளருடனும் எமது நியமனம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

அந்த கலந்துரையாடலின்போது எம்மால் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பாக வட மாகாண சபையிலிருந்தோ அல்லது வட மாகாணத்திற்கு பொறுப்பான சுகாதார அமைச்சிலிருந்தோ எழுத்து மூலமாக அறிக்கை எதுவும் அனுப்பிவைக்கப்படவில்லை என்பதை எம்மை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரும், பிரதி செயலாளரும் தெரிவித்தனர்.

அங்கிருந்து உடனடியாக எதிர்கட்சித் தலைவரின் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சருடன் எமக்கு முன் நிலையிலேயே தொலைபேசியில் உரையாடினார்.

இதன்படி, கடந்த காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எந்த கல்வித்தகமை அடிப்படையில் எங்களை உள்ளீர்ப்பு செய்யப்பட்டதோ அதற்கு அமைவான ஒரு வேண்டுகோளினையும் சேவைக்கால அடிப்படைக்கான வேண்டுகோளினையும் இதுவரையிலும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

எமது கோரிக்கை தொடர்பில் வட மாகாணசபையிலிருந்து அல்லது வட மாகாண சுகாதார அமைச்சினூடாக நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டால் அமைச்சரவை கூட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சம்மதம் தெரிவிக்கப்படும் என எமக்கு கூறப்பட்டது.

ஆனால் இன்று வரையிலும் வடக்கிலிருந்து எமது நிரந்தர நியமனம் தொடர்பாக எழுத்து மூலமாக ஆவணங்கள் எவையும் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.