இரண்டு கர்ப்பப்பையில் குழந்தை பெற்றெடுத்த 50 கோடியில் ஒரு பெண் : மருத்துவ உலகில் அதிசயம்!!

443

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இரட்டை கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகளை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் கார்ன்வால் நகரில் வசித்து வரும் ஆண்ட்ரூ தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஜெனிபர்தான் கர்ப்பமாக இருந்துள்ளார்.

ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அவருக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்ததும், ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தை இருந்ததும் தெரியவந்திருக்கிறது. சரியாக கருத்தரித்த 34-வது வாரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.

அறுவைச்சிகிச்சையின் மூலமாக இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்திருக்கிறார்கள். குழந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

மருத்துவம் கூறும் காரணம் என்ன?

பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணிகளில் மிக முக்கியக் காரணியாக இருப்பது இரண்டு கர்ப்பப்பை.

தாயின் வயிற்றில் இருக்கும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும், முதலில் இரண்டு கர்ப்பப்பை உருவாகி பின்னர்தான் ஒரே கர்ப்பப்பையாக மாறும். சிலருக்கு மாறாமல் அப்படியே இரண்டாகவே இருந்துவிடும்.

குழந்தையாகப் பிறக்கும்போதே அவர்கள் இரட்டை கர்ப்பப்பையுடன் (Bicornuate uterus) பிறப்பார்கள். அவர்களில் நூற்றுக்கு ஐம்பது பெண்களுக்குத்தான் இயற்கையாகக் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதிலும், பலருக்கு கரு வயிற்றில் தங்காது, கலைந்துவிடும். ஒரு சிலர்தான் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

இரண்டு கர்ப்பப்பை உடைய பெண்களுக்கு, ஒரு கர்ப்பப்பையில் குழந்தை வளர்வதே கஷ்டம். அப்படியிருக்கையில் ஜெனிபர் குழந்தை பெற்றெடுத்தது ஒரு அரிய நிகழ்வுதான்.