வவுனியா நகரசபை முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள் : நகரசபையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்!!

1288

வவுனியாவில் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்ய நிரந்தர இடம் ஒன்று வழங்குமாறு தெரிவித்து நகரசபைக்கு எதிராக இன்று (23.10.2018) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அங்காடி வியாபாரிகளை அங்கு வியாபாரம் செய்ய வவுனியா நகரசபை தலைவர் தடை விதித்ததன் எதிரொலியாக அங்காடி வியாபாரிகள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா பொது வைத்தியசாலை சந்தியிலிருந்து ஊர்வலமாக நகரசபையை வந்தடைந்து நகரசபை வாயிலை மறித்து நிலத்தில் அமர்ந்த நிலையில் சுமார் ஒரு மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரசபை தலைவரே எங்களுடன் பேச மறுப்பது ஏன், முதலாளிகளுக்கு வாழ்வு எங்களுக்கு சாவா? அங்காடி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வழங்குங்கள், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, நகரசபை தலைவரே தகாத வார்த்தை பிரயோகிக்காதே போன்ற வாசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நகரசபை தலைவர் இ.கௌதமன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலப்பிரசன்னா சமசரப் பேச்சவார்த்தைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நகரசபை தலைவர் மற்றும் அங்காடி வியாபாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் எதிர்வரும் 06.11-2018 வரை தொடர்ந்து அங்காடி வியாபாரிகள் முன்னைய இடத்திலேயே வியாபாரத்தில் ஈடுபடுவது எனவும் நகரசபையின் சபை கூடி முடிவு எடுத்தபின் அங்காடி வியாபாரிகளுக்கான நிரந்தர இடம் வழங்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரசபை தலைவர் இ.கௌதமன் , ஹொரவப்பொத்தான வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் அங்காடி வியாபாரிகள் சிலர் தங்களுக்குள் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகிப்பதன் காரணமாக பொது மக்களிடமிருந்து பல மறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே அவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்திருந்தேன்.

வவுனியா நகரசபைக்கு முன்புறமாக அவர்களுக்கான பிரத்தியோக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதை புறக்கணித்த நிலையிலேயே வீதி ஓரங்களில் வியாபாரநடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.