பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பாடசாலை சிறுமி மலாலா யூசுப்சாய்க்கு சமத்துவம் மற்றும் பாகுபாடு இன்மைக்கான சர்வதேச விருதை வழங்கவுள்ளதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு மலாலா யூசுப் சாய் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மெக்சிக்கோ கூறியுள்ளது.
குறிப்பாக வயது, பாலினம் மற்றும் சமயம் போன்ற பாகுபாடு இன்றி கல்விக்கான உரிமையை பாதுகாப்பதற்கான அவரின் போராட்டத்திற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.
2014ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிர் தப்பிய மலாலா யூசுப்சாய் சிறுவர்களின் உரிமைக்காக உலகலாவிய தூதுவராக நோக்கப்படுகின்றார்.
கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான மிக உயரிய விருதை மலாலா யூசுப்சாய் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்





