மட்டக்களப்பில் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மீன் ஏற்றும் பட்டா ரக வாகனம் ஒன்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் மேற்பகுதியும் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளதினால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணித்த சாரதியும், உதவியாளரும் காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









