பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான 33 வயது அப்துல் ரசாக்கின் வீடு லாகூரில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கழிவறை ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம மனிதர்கள், துப்பாக்கி முனையில் வீட்டில் இருந்தவர்களை மிரட்டிய படி, லொக்கரை உடைத்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
133 பவுன் தங்க நகைகள், வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச்சென்று விட்டனர்.
அப்துல் ரசாக்கின் பாஸ்போர்ட்டையும் கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை.
இது குறித்து லாகூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.





