வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேர் நியமனம்!!

1100

மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக 45 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

எல்.எல்.ஆர்.சீ அறிக்கையின் பரிந்துரைக்கு அமைவாக வவுனியா மாவட்ட காணி பிணக்குகளை தீர்க்கும் முகமாக நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத்தேர்வு இடம்பெற்று மத்தியஸ்தர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் தெரிவுசெய்யப்பட்ட 45 விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கும் இதன்போது நியமனம் வழங்கப்பட்டது. இதன் தவிசாளராக இ.நவரட்ணம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர் கெக்ரர் எஸ் யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் திசநாயக்க, மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் ஆணையாளர் எம்.சோமசுந்தரம், மத்திய சபை ஆணைக்குழுவின் செயலாளர் ரஜனீ அத்தபத்து, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் ஆலோசகரும், சட்டத்தரணியுமான எம்.திருநாவுக்கரசு, ஆசியான் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஜயந்த, மத்தியஸ்தர் சபை நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.