மிளகாய் தூள்
சபாநாயகருக்கு எதிராக சபையில் அரங்கேறிய செயற்பாடுகளுக்கு கட்சிபேதம் பார்க்காது விசாரணைகளை முன்னெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்பு இனிவரும் காலங்களில் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 15ஆம் திகதி சபை கூடியபோது இடம்பெற்ற சம்பவங்களும், சபாநாயகருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தமையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் மீது தாக்குதல்களை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற குடும்பத்துக்குத் தலைவரான சபாநாயகருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறித்து நாம் கவலைப்பட வேண்டும்.
சிலர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு மாவட்டத்தின் சார்பில் தான் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றார். அவரின் நடவடிக்கை சரியில்லை என்றால் மாவட்ட மக்களின் நடவடிக்கையும் சரியில்லை என்பதே பொருள்படும். இந்தச் செயல்கள் எம்மை தலை குனிய வைத்துள்ளன. அதேபோல் கடந்த 16ஆம் திகதி சபாநாயகரின் கதிரைகள், சட்ட புத்தகங்கள் வீசியெறிப்பட்டமை மிக மோசமான செயல்.
மிளகாய்த் தூள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, நாடாளுமன்றில் அதனை வாங்க முடியுமா? என்று வெளியில் கேட்கின்றனர். அந்த நிலைக்கு நாடாளுமன்றம் தள்ளப்பட்டுள்ளமை குறித்து கவலையடைகின்றோம். சபாநாயகருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஒரு கட்சித் தலைவர் அவர்களின் பிரிநிதிகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால், அவர்கள் பார்வையாளர்களாக இருந்து வன்முறைகளுக்கு ஆதரவளித்தனர்.
இந்த சம்பவங்கள் இனியும் இடம்பெறக்கூடாது. சட்டங்களை இயற்றுகின்ற உயர் சபை இது. சபாநாயகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சபாநாயகருக்கும், செயலாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்? எந்த கட்சியாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். வேறு எந்த நாட்டிலும் ஏற்படாத அபகீர்த்திகள் இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளன.
நடந்த சம்பவங்களை விசாரணை செய்து சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.












