திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 26ம் திகதி காணாமல் போன இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பகல் 12.00 மணியளவில் திருக்கோவில் மண்டானை காயத்திரி கோவிலுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
மண்டானை சுனாமி வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கூலித் தொழிலாளியான இந்திரன் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது..
கடந்த 26ம் திகதி குறித்த இளைஞரை அவரது தந்தையார் அடித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு, சென்றவர் அன்றைய தினம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று அந்தப் பகுதியில் மாடுகளை மேய்பவர் ஒருவர் கல்பாறைகளுக்கு அருகில் உள்ள இத்தி மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.