அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.
அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவிலும் பறை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. சிகாகோ தமிழ் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் யூலை மாதம் மாதம் செயின்ட் லூயிஸில் நடைபெற உள்ள பெட்னாவின் 2014 தமிழ் விழாவிலும் பறை இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அமெரிக்க பல்கலைகழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாக பதிவு செய்யும் முயற்சியிலும் உள்ளார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசை எழுப்பி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள் புதுப்பித்து வருகிறார்கள்.
இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய அனைவருமே கணனி துறையில் வல்லுனர்கள் ஆவார்கள்.
தமிழ் ஆர்வத்தினால் தமிழர்களின் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துரைக்கவும் இந்த அரிய முயற்சியில் பங்கெடுத்து வருகிறார்கள்.
மேலும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடைத் தொகையை முழுமையாக, தமிழகத்தில் உள்ள பறை இசைக் கலைஞர்களின் நலனுக்காக அனுப்பி விடுகிறார்கள்.