அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் திரும்பிய அதிசயம்!!

524

indபுதுச்சேரியில் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு இறந்து போனதாக புதைக்கப்பட்ட ரிக்ஷா தொழிலாளி உயிருடன் திரும்பியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் சாலையோர பிளாட்பாரத்தில் வசிப்பவர் மாசிலாமணி (48). ரிக்ஷா தொழிலாளியான இவருக்கு டெனிஸ் (45) என்ற மனைவியும், ஜெயா (26), மோகன் (23) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை பொலிசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் திகதி அன்று குருசுகுப்பம் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. பொலிசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் குறித்து விசாரணையை தொடங்கியபோது மாசிலாமணி காணாமல் போனதாக டெனிஸ் புகார் கொடுத்தது தெரியவந்தது. சடலத்தை அடையாளம் காட்ட டெனிசும், அவரது உறவினர்களும் அழைக்கப்பட்டனர்.

சவக்கிடங்கில் இருந்த சடலத்தை பார்த்து அது மாசிலாமணிதான் என அடையாளம் காட்டினர். சடலமானது பரிசோதனைக்கு பிறகு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பிறகு உறவினர்கள் கூடி இறுதிச் சடங்குகளை நடத்தி வம்பாகீரப்பாளையம் சன்னியாசித் தோப்பு சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

மறுநாள் 25ம் திகதி மாலையில் மாசிலாமணி திடீரென அவர்கள் முன் வந்து நின்றார். இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் நேரில் வந்து நிற்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தனக்கு இறுதிச் சடங்குகள் நடத்தியதாக கூறியதை கேட்டதும் மாசிலாமணியும் செய்வதறியாது திகைத்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல் அனாதை சடலம் என்பதை வழக்கு ஆவணங்களில் திருத்தம் செய்வதற்கான பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

வீடு திரும்பிய மாசிலாமணி மனைவிக்கு புது தாலி கட்டி குடும்ப வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.