சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் மிகச் சிறந்த வீரர். அவருக்கு வேறு யாரும் நிகரில்லை என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்யா தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய பத்திரிகையாளர்களுக்கான பிரீமியர் லீக் தொடரில் சிறப்பு விருந்தினராக ஜயசூர்யா பங்கேற்றார். அப்போது அவர் அளித்த செவ்வியில் குறிப்பிட்டதாவது..
கிரிக்கெட்டில் சச்சின் புரிந்த சாதனைகளும், அவர் தன் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியதும் அனைவரும் அறிந்ததே. சச்சின் மிகவும் எளிமையானவர். அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். நான் பார்த்தவரையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் அவர்தான் சிறந்த வீரர்.
ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அவருடன் இணைந்து விளையாடியது என் வாழ்வின் அற்புதமான தருணம். தற்போதைய டோனி தலைமையிலான இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை நன்றாக உள்ளது. விராட் கோலி, சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இன்றைய இளம் வீரர்கள் 20 ஓவர் ஆட்டத்தின் மூலம் தங்கள் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்குகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். டெஸ்ட், ஒருநாள் ஆட்டத்திலும் இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜயசூர்யா தெரிவித்தார்.





