2014 மார்ச் மாதத்துடன் அரசாங்கத்தின் ஆட்சி கவிழும். அரசாங்கமே தலையில் மண்ணை வாரிப் போட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் காலம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதே புத்திசாலித்தனம் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
அரசாங்கத்தின் வரவு–செலவுத்திட்டமும் இன்றைய பொருளாதார சிக்கல்களும் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துக்கும் வரிகளை அறவிட்டு அப் பணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் உண்டு வருகின்றது.
கசினோ சூதாட்டக்காரர்களுக்கும் சர்வதேச வியாபாரிகளுக்கும் ஏற்ற வரவு செலவுத் திட்டத்தினை ஆரம்பித்து அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துவிட்டனர். இந்த நிலை மேலும் அதிகரிக்கும்.
சர்வதேச நாடுகளிடம் வாங்கிய கடன்களை கட்ட வேண்டுமாயின் மக்களிடம் வரி அறவிட்டு பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமே ஒரே வழி. அதனையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று செய்து வருகின்றார்.
அதேபோல் இன்று அமைச்சர்களே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட ஆரம்பித்து விட்டனர். அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு அமைச்சர்களே முரண்பட ஆரம்பித்து விட்டனர். விலையேற்றமும், பண நெருக்கடியும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் என்பதை இன்று பலர் உணர்ந்து விட்டனர்.
எனவே எதிர்வரும் மார்ச் மாதத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படும். மக்களே அரசாங்கத்தினை வீழ்த்தி புதிய அத்தியாயத்தினை நாட்டில் ஆரம்பிப்பார்கள்.
மேலும் இன்று சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் பணிந்துவிட்டது. மக்கள் மத்தியில் இனவாதத்தையும் பிரிவினையையும் தூண்டுவதற்காககே ஜனாதிபதி சர்வதேசத்தினை பகைத்துக் கொள்வதைப் போன்று நாடகமாடுகின்றார். ஆனால் அரசாங்கத்தின் சாவி இன்று சர்வதேசத்திடம் அகப்பட்டு விட்டது.
அதன் காரணத்தினால்தான் தற்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி யுத்தத்தில் இறந்த மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் கணக்கெடுப்பினை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.





