வவுனியா பஸ் நிலையத்தில் வயோதிப் பெண்ணின் பைக்குள் துப்பாக்கி ரவைகள் : பொலிஸார் தீவிர விசாரணை!!

582

buttetsவவுனியா பஸ் நிலையத்தில் வயோதிபப் பெண்ணொருவரின் பயணப் பைக்குள் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதையடுத்து அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

முல்லைத்தீவு முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தில் இருந்து கண்டி செல்வதற்காக வவுனியா பஸ் நிலையத்திற்கு வயோதிபப் பெண்ணொருவர் வந்துள்ளார். இவர் பஸ் நிலையத்தில் இருந்த பொது மலசல கூடத்திற்கு செல்வதற்காக தனது பயணப்பையை ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்காக கண்டிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி தனது தேவையின் பொருட்டு பயணப்பையை திறந்தபோது அவற்றில் துப்பாக்கி ரவைகள் உள்ளதை அவதானித்துள்ளார்.

உடனடியாக பஸ் சாரதியிடம் துப்பாக்கி ரவைகளைக் காண்பித்து விடயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த வயோதிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சாரதி பொலிஸாரிடம் விடயத்தை கூறியுள்ளார்.

வயோதிபப் பெண்ணின் பயணப் பையினுள் மைக்கேரா பிஸ்டலுக்கு பயன்படுத்தும் ரவைகள் 18 காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் பையினுள் யார் துப்பாக்கி ரவைகளை வைத்தது என பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.