துடுப்பில் பெயர் பதிக்க டோனிக்கு 26 கோடி!!

484

dhoni_bat_waveஇந்திய அணி தென் ஆபிரிக்காவுடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் டோனி சில சாதனைகளை படைக்க உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த அசாருதீனின் சாதனையை முறியடித்து டோனி முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டோனி 151 போட்டிகளில் விளையாடி 5213 ஓட்டங்கள் குவித்துள்ளார். அசாருதீன் சாதனையை தகர்க்க டோனிக்கு இன்னும் 27 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றால் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த அணித்தலைவர் என்ற பெருமையும் டோனிக்கு கிடைக்கும்.
இந்த வகையில் அசாருதீன் 90 வெற்றிகள் பெற்று முதலிடத்திலும், டோனி 88 வெற்றிகளுடன் 2வது இடத்திலும் உள்ளார்.

இந்த முறை அவர் தனது மட்டையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்பார்ட்ன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரை பதித்துள்ளார். மட்டை தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனம் டோனியை ஓராண்டிற்கு 20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதவிர அமைட்டி பல்கலைக்கழகத்தின் பெயரும் டோனியின் மட்டையில் இடம் பெற்றுள்ளது. இதற்காக டோனிக்கு 6 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்தியா- அவுஸ்திரேலியா தொடர் வரை டோனி ரிபோக் நிறுவனத்தின் பெயர் பதித்த மட்டையை தான் பயன்படுத்தி வந்தார். இந்த நிறுவனம் டோனியை 5 ஆண்டுகளுக்கு 6 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து டோனியை ஸ்பார்ட்ன் நிறுவனம் பிடித்துக்கொண்டது. அந்த நிறுவனத்தின் பெயரை பதித்த மட்டையை மேற்கிந்திய அணி தொடரிலேயே பயன்படுத்த தொடங்கிவிட்டார். எந்த ஒரு வீரரும் இவ்வளவு அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது கிடையாதாம்.