வவுனியா – ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் மதுபான விற்பனை நிலையம் அமையப் பெறுவதால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்படும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மருதமடு பெரியமடு பகுதியில் இன்று வீதி புனரமைப்பு பணியை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,
ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் முன்பு வெதுப்பகம் அமைந்திருந்த காணி ஒன்றில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நடவடிக்கையானது ஓமந்தைப் பகுதியிலுள்ள கூலித் தொழிலாளர்களை மேலும் வறுமைப்படுத்தும் நடவடிக்கையாகவும், குடும்ப வன்முறைகள் அதிகரிக்க செய்யும் நடவடிக்கையே.
இதனைத் தடுத்து நிறுத்தி இப்பகுதியிலுள்ள பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கான சகல நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இப்பகுதியில் மதுபான நிலையத்தை அமைப்பதற்கு பெண்களாகிய நாங்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதுடன் மதுபானம் அருந்தும் கணவர்களினால் கடந்த காலங்களில் பெண்கள் பலர் தற்கொலைகளையும் செய்துள்ளனர்.
இதனையும் மீறி இப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் இடம்பெறுமாக இருந்தால் அதனைத்தடுத்து நிறுத்த அனைத்துப் பெண்களையும், பெண் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும்.
குறித்த பகுதிகளில் வைத்தியசாலை, ஓமந்தை மத்திய கல்லூரி, கமநல கேந்திர நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், பெண்கள் பணிபுரியும் பூ தொழிற்சாலை, தனியார் கல்வி நிலையம், ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சமய வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இதனால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிப்படையவுள்ளது.
எனவே, இப்பகுதியில் மதுபான நிலையம் அமைவதால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படும். எனவே, இந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.





