யுவதியைக் காப்பாற்றச் சென்ற இளைஞனுக்கு காதலனால் நேர்ந்த கொடூரம்!!

540

காலி நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் யுவதியொருவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிய இளைஞனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனை கத்தியால் குத்தி விட்டு யுவதியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சென்றபோது பொலிஸார், யுவதியைக் காப்பாற்றி முச்சக்கர வண்டி சாரதி மற்றும் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

தொடந்துவ கட்டுதேம்பே பிரதேசத்தைச் சேர்ந்த மருதனை படைமுகாமில் பணிபுரியும் இராணுவச் சிப்பாய் மற்றும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஆகியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த யுவதி காலி நகரில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.

2008ம் ஆண்டு தொடந்துவ பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த இராணுவச் சிப்பாயை காதலித்துள்ளார் .

இந்த நிலையில் 2009ம் ஆண்டு குறித்த நபர் படையணியில் இணைந்துள்ள நிலையில் 2013ம் ஆண்டு யுவதி இளைஞருடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனால் 2015 ல், இருவரும் மீண்டும் நண்பர்கள் ஆகியுள்ளனர். எனினும் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, யுவதி ஒக்டோபர் மாதம் மீண்டும் இளைஞனுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்

அதன் பின்னர் குறித்த சிப்பாய் தன்னை பல முறை அச்சுறுத்தியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை வியாபார நிலையத்திற்கு சென்று வியாபார நிலையம் திறக்கப்படும் வரை யுவதியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

சந்தேக நபர் கத்தியைக்கொண்டு வந்து யுவதியின் தலை முடியைப் பிடித்து இழுத்து மூன்று சக்கர வண்டியில் தள்ளியுள்ளார்.

யுவதியின் சத்தத்தை கேட்ட வியாபார நிலையத்தில் இருந்த இளைஞன் காப்பாற்ற முயன்றபோது குறித்த நபர் இளைஞனைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் எக்வெல்ல வீதியில் மினுவங்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதியை மீட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் முச்சக்கர வண்டி சாரதியையம் கைது செய்துள்ளனர்.