வீடு என நினைத்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள்!!

791

kollaiதமிழ்நாடு, கள்ளக்குறிச்சியில் வீடு என நினைத்து விரைவு நீதிமன்றத்தில் புகுந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள வீடு காலியாக உள்ளது.

2வது தளத்தில் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 3வது தளத்தில் உள்ள வீட்டில் நீதிமன்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நீதிமன்றத்தை திறக்க அலுவலக உதவியாளர் ஜெகன் வந்தார். அப்போது தரைத்தளத்தில் உள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைந்து தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது பற்றி நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ஜெகதீசன் மற்றும் குற்றப்பிரிவு பொலிசார் விரைந்து வந்து உடைக்கப்பட்டு காலியாக உள்ள வீடு, நீதிமன்றம் மற்றும் கோர்ட்டு ஆவணங்கள் வைத்திருந்த அறையை பார்வையிட்டனர்.

அப்போது ஆவணங்கள் வைத்திருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தன. ஆனால் வழக்குகளின் ஆவணங்கள் எதுவும் கலைக்காமல் அப்படியே இருந்தது.

விரைவு நீதிமன்றம் அமைந்த கட்டிடம் அடுக்குமாடி குடியிருப்பு என்பதால், நீதிமன்றம் இருந்த கட்டிடத்தை வீடு என நினைத்து அங்கு கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்து இருக்கலாம்.

ஆனால் உள்ளே சென்ற பின்னர் அது நீதிமன்ற கட்டிடம் என்று தெரிந்ததும் அந்த மர்ம மனிதர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.

இதற்கிடையே யாரேனும் நீதிமன்ற ஆவணங்களை எடுக்க வந்தார்களா என்ற கோணத்திலும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கு தொடர்பாக ஏதாவது முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதா என்று நீதிமன்ற ஊழியர்கள் ஆவணங்கள் பற்றிய விவரங்களை சரிபார்த்து வருகின்றனர்.