கசினோ சூதாட்ட நிலையத்த்துடன் கூடிய ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான சட்டரீதியான அனுமதி ஒரு மாதத்திற்குள் கிடைக்காது போனால் இலங்கையில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் மியன்மாரில் முதலீடு செய்யப்படும் என ஜேம்ஸ் பாக்கர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
கொழும்பில் தான் ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்ட கசினோ சூதாட்ட நிலையத்துடன் கூடிய ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதி ஒரு மாத காலத்திற்குள் கிடைக்க வேண்டும்.
அப்படி கிடைக்காது போனால் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் மியன்மார் நாட்டில் முதலீடு செய்யப்படும் என பாக்கர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கசினோ சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கும் சட்டமூலத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில் ஜேம்ஸ் பாக்கரின் மேற்படி அறிவிப்பை அடுத்து இலங்கைக்கான அவரது பிரதான பிரதிநிதியான தனியார் வங்கி ஒன்றின் தலைவர் , இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் திறைசேரியிடம் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பேச்சுவாரத்தைகள் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி ஜேம்ஸ் பாக்கருக்கு அறிவிப்பதற்காக தனியார் வங்கியின் தலைவர் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உத்தேச கசினோ நிலையத்துடன் கூடிய ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும், அதனை நிர்மாணித்து முடிக்க மூன்று வருடங்கள் ஆகும் எனவும், அதற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்து கொள்ள முடியும் என தனியார் வங்கியின் தலைவர் ஊடாக அரசாங்கம் ஜேம்ஸ் பாக்கருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.