சஞ்சய் தத்துக்கு மீண்டும் பரோல் : எரவாடா சிறை அருகில் போராட்டம்!!

957

Sanjay duttமும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரங்கள் பரோலில் சென்ற சஞ்சய் தத், அக்டோபர் 30ம் திகதி தான் சிறைக்கு திரும்பினார்.

இந்நிலையில் சஞ்சய் தத் தனது மனைவி மான்ய மதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி அவரை கவனிப்பதற்காக ஒருமாதம் பரோல் கேட்டு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதை ஏற்று அவர் ஜெயில் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவரை சிறை அதிகாரிகள் ஒரு மாதம் பரோலில் அனுப்ப ஆலோசித்து வருகின்றனர்.

சஞ்சய் தத்துக்கு மீண்டும் பரோல் அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சஞ்சய் தத்தின் மனைவி பார்ட்டிகளில் கலந்துகொண்ட படங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அவருக்கா உடம்பு சரியில்லை என வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஏழைகளுக்கு ஒரு நீதி, வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சஞ்சய் தத்துக்கு பரோல் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் எரவாடா சிறையின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் கறுப்பு கொடிகளுடன் கோஷமிட்டனர். சிறையில் உள்ள மற்ற கைதிகளைப் போன்று சஞ்சய் தத்தையும் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.