அடுத்த வருடம் பிறேசிலில் நடைபெறவுள்ள உலக கோப்பை காற்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
20வது உலக கோப்பை காற்பந்து போட்டி பிரேசில் நாட்டில் அடுத்தாண்டு ஜூன் 12ம் திகதி முதல் ஜூலை 13ம் திகதி வரை நடக்கிறது.
இதில் போட்டியை நடத்தும் பிரேசில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. பிரேசில் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே பிரதான சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறுவது என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் முறை நேற்று பிரேசிலின் பாயாவில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக மறைந்த தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியுடன் குலுக்கல் நடைபெற்றது. இதன் முடிவில் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் பிரேசில் இடம் பெற்றுள்ளது.
டி பிரிவில் உருகுவே, கோஸ்டரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய பலம் வாய்ந்த அணிகள் இடம் பிடித்துள்ளதால் இந்த பிரிவு ‘குரூப் ஆப் டெத்’ என்று அழைக்கப்படும். இதே போல் நடப்பு சம்பியன் ஸ்பெயின், கடந்த முறை 2வது இடம் பிடித்த நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை கொண்ட ‘பி’ பிரிவும் சவால் நிறைந்ததாக அமையும்.
ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம் வருமாறு
A பிரிவு: பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்
B பிரிவு: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா
C பிரிவு: கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்
D பிரிவு: உருகுவே, கோஸ்டா ரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி
E பிரிவு: சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோன்டுராஸ்
F பிரிவு: அர்ஜென்டினா, போஸ்னியா-ஹெர்சகோவினா, ஈரான், நைஜீரியா
G பிரிவு: ஜெர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா
H பிரிவு: பெல்ஜியம், அல்ஜீயா, ரஷ்யா, கொரியா.
போட்டித்தொடரின் ஆரம்பநாளான ஜூன் 12ம் திகதி ஐந்து முறை சாம்பியனான பிரேசிலும், குரோஷியாவும் சாவ் பாவ்லோ நகரில் மோதுகின்றன.





