வடக்கின் நிலமைகள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் ஆராய்ந்தனர் :இரா.சம்பந்தன்!!

847

sampanthanஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கே பல பகுதிகளுக்கும் சென்று பார்த்துள்ளனர்.

சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் தமிழ் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் இந்தக் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வுத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு தம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு உள்ள தடங்கல்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் காணி கையகப்படுத்தல் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் கேட்டறிந்துகொண்டதாக சம்பந்தன் கூறினார்.

வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டைகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிவருவது பற்றிய கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று கேட்டபோது அரசாங்கத்தை உதாசீனம் செய்யாமல் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான வாய்ப்புகளை தாங்கள் வழங்கிவந்துள்ளோம் என்றார் சம்பந்தன்.

வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் எதிர்வரும் காலங்களில் நிலைப்பாடுகளை வெளியிடலாம் என்றும் சம்பந்தன் கூறினார்.

பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் உறுதியான நிலைமைகள் எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்த பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரசு அங்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் பழிவாங்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐநா சிறப்பு பிரதிநிதி சலோக்கா பேயானியும் இலங்கையில் தனது ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளார். கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் அவர் பல்தரப்பு தரப்பு பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் அடுத்த அமர்வு நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பிபிசி தமிழ்-