தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 5ம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் பீரிசும், வரும் 10ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை, கென்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ள முன்னரே முடிவு செய்திருந்தனர்.
கென்யாவில் இருந்து திரும்பும் வழியில் தென்னாபிரிக்கா சென்று நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.