தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலா உயிரிழப்புக்களாக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் உயிரிழப்புக்காக பாற்சோறு உண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் தெரிவித்தார்.
அடுத்த மார்ச் மாதம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..
சிறுபான்மை இனத்தவர்களையும் விமர்சிக்கின்றீர்கள். வெளிநாடுகளையும் விமர்சிக்கின்றீர்கள் ஏன் தேர்தலுக்காக. ஆபிரிக்க நாடுகளில் 19ல் 7 நாடுகளே மாநாட்டுக்கு வந்தன. அரசின் முயற்சி வெற்றி பெறவில்லை.
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என கூறுகின்றீர்கள். கியூபா அமெரிக்காவிற்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணை கொண்டு வருகிறது. இதன்போது கியூபாவுக்கு 108 வாக்குகள் ஆதரவாக கிடைத்தது. அமெரிக்காவிற்கு 2 வாக்குகளே கிடைத்தது.
எனவே ஐ.நா.வை அமெரிக்கா ஆட்டுவிக்கின்றதென்ற உங்கள் கருத்தை ஏற்க முடியும். இலங்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இதனை கவனத்தில் கொள்ளவில்லை.
சூடானுக்கும் கிழக்கு திமோருக்கும் எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. இறுதியில் அந்நாடுகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன.
இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும். எமக்கு எதிராக பிரேணைகள் முன் வைக்கப்படமாட்டாது எனகிறீர்கள். ஆனால் அனைத்தும் இடம்பெற்றன. கமரூனின் கருத்தை இலகுவாக எண்ண வேண்டாம். எமக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
பராக் ஒபாமாவின் அலுவலகத்தில் 20க்கு மேற்பட்ட தமிழர்கள் தொழில் புரிகின்றனர். நெல்சன் மண்டேலா யுத்தம் முடிந்தவுடன் மன்னிப்பு கேட்டார். சிறையிலிருந்து மண்டேலா விடுதலையாகி ஜனாதிபதி பதவியேற்ற போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
ஆனால் யுத்தத்திற்கு பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள் பாற்சோறு உட்கொண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள். உயிரிழப்புக்களுக்காக மன்னிப்பு கோராது விழா கொண்டாடினீர்கள்.
மனித உரிமை மீறல் கேள்விகளுக்கு அதிவேக பாதை நிர்மாணித்துள்ளோம். விமான நிலையம் துறைமுகம் நிர்மாணித்துள்ளோம் என சர்வதேச விசாரணைகளின் போது கூற முடியாது.
அடுத்த மார்ச் மாதம் நாட்டுக்கு பாரிய நெருக்கடியான மாதமாகும். சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக பேசும் போது துரோகிகளாக முத்திரை குத்துகிறீர்கள்.
சனல் 4 இலங்கைக்கு வரச்சொல்லி எங்கும் போடவில்லை. யுத்தத்தை பதிவு செய்ய அரசு ஊடகங்களே நேரடியாக அங்கு சென்றன. தனியார் ஊடகங்கள் செல்லவில்லை. அப்படியானால் அரச ஊடகங்களே சாட்சியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கின.