மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்திரேலிய வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது
சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு அவுஸ்திரேலியா செல்ல வீசா கோரியிருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் விண்ணப்பம், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அவுஸ்திரேலியத் தூதரக பேச்சாளரிடம் விளக்கம் கோரிய போது எந்தவொரு வீசா விவகாரம் தொடர்பாகவும் கருத்து வெளியிடுவதற்கு சட்டரீதியான தடை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவுஸ்திரேலியாவின் இந்த முடிவு தனக்கு கடந்தவியாழக்கிழமை தெரியப்படுத்தப்பட்டதாக, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய பகுதிகளிலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவங்களின் கட்டளை அதிகாரிகளும் கூட இதுபோன்ற அவமானங்களைச் சந்தித்துள்ள போதிலும் அந்தக் குற்றச்சாட்டுகள் வரையறைக்குட்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றனர். எனக்கு வீசா மறுக்கப்பட்டது தனியானதொரு விடயமல்ல.
ஒரு முறையான இராணுவத்தால் இலக்கு வைக்கப்பட்ட தீவிரவாதத்துக்கு உலகின் பல பாகங்களிலும் புகலிடம் கொடுக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு வீசா வழங்க முடியாது என்று அவுஸ்திரேலிய தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உள்ளிட்ட பல இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.