2013ல் புதுமுக நடிகைகள் அதிகம் கவர்ந்தனர். நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, அனுஷ்கா, ஹன்சிகா, அமலாபால் போன்றோர் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக் கொண்டனர்.
நயன்தாரா இந்த வருடமும் தமிழ், தெலுங்கில் நம்பர் வன் ஹீரோயினாக இருக்கிறார். காதல் சர்ச்சைகளால் ஒரு வருடம் இடைவெளி விட்டு வந்தாலும் நயனுக்கு அதே கிரேஸ் இருந்தது ஆச்சர்யம். ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ராஜா ராணி படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அஜித்துடன் நடித்த ஆரம்பம் படமும் ஹிட்டானது.
தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் அனாமிகா படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார். இது இந்தியில் வித்யாபாலன் நடித்து பரபரப்பாக ஓடிய கஹானி படத்தின் ரீமேக் . இதில் நயன்தாராவுக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதல் படத்திலும் நடிக்கிறார். சிம்பு படம் உள்பட மேலும் மூன்று படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்.
காஜல் அகர்வாலை கடந்த வருடம் ரிலீசான துப்பாக்கி படம் முன்னணி நடிகையாக்கியது. ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடித்தார். தற்போது விஜய்யுடன் மீண்டும் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.
அனுஷ்கா நடித்து இந்த வருடம் அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் படங்கள் வந்தன. இதில் சிங்கம் 2 அதிக வசூல் குவித்தது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டவை.
ஹன்சிகாவுக்கு இந்த வருடம் தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 படங்கள் கைகொடுத்தன. கார்த்தி நடிக்கும் பிரியாணி படம் டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆக உள்ளது. வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான் கராத்தே, உயிரே உயிரே என நிறைய படங்கள் ஹன்சிகாவின் கவைசம் உள்ளன.
தலைவாவில் விஜய் ஜோடியான அமலாபால், இப்போது ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படங்களில் நடிக்கிறார்.
த்ரிஷாவுக்கு சமர் படம் மட்டும் ரிலீஸ் ஆனது, ஜீவாவுடன் நடித்த என்றென்றும் புன்னகை டிசம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார்.
நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி படத்திலும் கவனம் ஈர்த்தார். நையாண்டி படம் சரியாகப் போகாவிட்டாலும் நஸ்ரியா முன்னணி நடிகையாக இருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலரு ரிப்பனால் பிரபலமாகிவிட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போது பென்சில். வீர தீர சூரன், ஈட்டி எனும் மூன்று படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.
தமன்னா, ஸ்ருதி, இலியானா, சமந்தா , அஞ்சலி போன்றோருக்கு தமிழில் இந்த வருடம் படங்கள் இல்லை.





