வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினுடைய பொதுச் சபைக் கூட்டத் தீர்மானங்கள் 2019

988

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இரண்டாவது பொதுக் கூட்டமானது 2019.02.16 ஆம் திகதியன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 12:30 மணியளவில் நிறைவு செய்யப்பட்டது. இதன் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவு இடம்பெற்றதுடன் வட மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு முக்கிய தீர்மானங்கள் பொதுச்சபையினால் மேற்கொள்ளப்பட்டது. அவை பின்வருமாறு,
01. அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள்:

மத்திய சேவையினைச் சேர்ந்த வெளிமாவட்டத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பலர் 07 வருடங்களை கடந்த நிலையிலும் அவர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரியும் மேற்படி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை எதிர்நோக்குவதுடன் சில பின் தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்களுக்கு செல்வதிலும் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றத்தினை வருகின்ற மார்ச் மாதம் 2019 இற்குள் பெற்றுக் கொடுப்பதற்கான உரிய அழுத்தங்களை கொடுப்பதோடு மேற்படி இடமாற்றங்கள் தொடர்பில் குறித்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளினை உரிய காலப்பகுதிக்குள் எடுக்காது விடின் வெளிமாவட்டத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்காக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமானது மிக இறுக்கமான தீர்மானங்களை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை வெளி மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்வது தொடர்பில் புதிய இட மாற்றக் கொள்கை ஒன்றினை சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு முன் வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதாவது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தனது சொந்த மாவட்டம் தவிர்ந்து பிற மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யும் போது மூன்று வருட சேவைக்காலத்தின் பின்னர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீளவும் சொந்த மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்பதே குறித்த முன்மொழிவு ஆகும்.
மேலும் இடம்மாற்றம் தொடர்பில் மருத்துவ காரணங்கள் உடைய வெளிமாவட்டத்தில் பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதோடு குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களது இடமாற்றக் கோரிக்கைகளை முதன்மைப்படுத்துதல் வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
02. மாகாண சேவையினைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதோடு திணைக்கள ரீதியாக உரிய கடமைப் பட்டியல்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
 
03. அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களை ஒன்றிணைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கங்களுக்கான சமாமசம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளினை மேற்கொள்ளுவதனூடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக பலமுடன் செயற்படல்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் பொதுச் சபையினால் ஏக மனதாக தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டதோடு குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பினை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டது.
மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் செயற்படுகள் தொடர்பில் எமது நிர்வாகக் குழுவினுடைய தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை பார்வையிடுவதனூடாக அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அறிந்து கொள்ள முடியும்.
நன்றி
தகவல்
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்