இன்று முதல் உண்ணாவிரதம் தொடங்குகிறார் அன்னா ஹசாரே!!

566

annaஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறார் அன்னா ஹசாரே.

இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஜன்லோக்பால் மசோதாவை அது நிறைவேற்ற தவறியதுதான். காங்கிரஸ் செய்த நம்பிக்கை துரோகத்துக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டும் மன்மோகன் இந்த ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாதது ஏன் கடந்த முறை டெல்லியில் நான் உண்ணாவிரதம் இருந்தபோது எனக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் ஜன்லோக் பால் மசோதாவை கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது. எனவே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

நான் அவர் மீது நம்பிக்கை வைத்து உண்ணாவிரதத்தை முடித்தேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னையும் மக்களையும் ஏமாற்றும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.

மத்திய அரசு எழுத்து மூலம் எனக்கு உறுதி அளித்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அது தனது உறுதிமொழியை காப்பாற்றவில்லை. மக்களவையில் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட ஜன்லோக் பால் மசோதா தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றுவதுதான் பாக்கி. ஆனால் ஓராண்டு காலமாகியும் அங்கு கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.

2012ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஜன்லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று கூறி அரசிடம் இருந்து எனக்கு பல கடிதங்கள் வந்தன.பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும், மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று அடுத்தடுத்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

மழைக்கால கூட்டத்தொடரும் முடிந்து விட்டது. எனவேதான், வேறு வழியின்றி எனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் நாளை (இன்று) காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். நாடாளுமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.