அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (22.02) காலை 7.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போகஷ்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 75,000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சுற்றிவளைப்பினை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும்,
மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹரா நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா, மன்னார் மாவட்ட நீர் உயிரினசெய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்நீர் மாசடைவதாகவும், குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.