காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்குமிடையில் மோதல் : மன்மோகனின் பதவி பறிபோகும் சாத்தியம்!!

596

Soniaநடைபெற்று முடிந்த நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் சூழ்நிலையில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வழக்கத்துக்கு மாறாக உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பில் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்படக் கூடும் என்றும், ஆம் ஆத்மி கட்சி யிடமிருந்து மக்களின் செல்வாக்கைப்பெறும் உத்தியை காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை.

ஒருபடி மேலே போய் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தக்க சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், அவர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் கூறியிருப்பது அரசியல் நோக்கர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.

அதேநேரம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே பிரதமர் அலுவலகத்துக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இரு தரப்புக்குமிடையிலான இந்தப் பனிப்போர் தற்பொழுது வெளிச்சத்துக்குவர ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் பின்னடைவைச் சந்திப்பது உறுதியானபோது காங்கிரஸ் கட்சித் தலைமையின் சார்பில் மூத்த அமைச்சர் ஒருவரும், கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் பிரதமரின் மனநிலையை அறிந்து கொள்ள அவரது தரப்பினரைச் சந்தித்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவருமே கட்சித் தலைமைக்கு, சோனியா காந்திக்கு, நெருக்கமானவர்கள் என்பதால், அவரது ஆலோசனையின் பேரில்தான் சந்திக்கிறார்கள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவரல்ல பிரதமர் மன்மோகன் சிங்.

காங்கிரஸ்சுக்கு எதிராக இருக்கும் சூழலைத் திசைதிருப்ப பிரதமர் மாற்றம் உதவலாம் என்பதை மறைமுகமாக அவர்கள் குறிப்பிட்ட போது சிரித்துக் கொண்டே கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் இதைத் திசை திருப்ப முடியுமே என்று எதிர்கேள்வி எழுப்பினாராம் பிரதமருக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், வேட்பாளர்கள் தேர்விலும், பிரசாரத்திலும் அவரது பங்களிப்புதான் கணிசமாக இருந்தது. வழக்கம்போல, வேட்பாளர் தேர்வில் பிரதமர் தலையிடவே இல்லை.

பிரசாரம் என்று எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி டில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் மொத்தம் 21 பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் நான்கு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மன்மோகன் டில்லியில் நடக்க இருந்த நான்காவது கூட்டம் திடீரென்று இரத்து செய்யப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாக வேண்டிய நிலைமையை கட்சித் தலைமை மட்டுமல்ல, மாநிலத் தலைவர்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது.

பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் டில்லியில் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்த நவம்பர் 30 பேரணியும் பொதுக்கூட்டமும் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங்கால் நன்மை ஏற்படுவதைவிட கட்சியின் பெயருக்கு களங்கம்தான் அதிகரிக்கும் என்று டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கருதியதால்தான், அவர் கலந்து கொள்ள இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிகிறது.

ஜப்பான் அரசரின் விஜயத்தையொட்டி விருந்தினர்களுடன் இருக்க வேண்டிய காரணத்தால் பிரதமர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கட்சி பொதுச் செயலாளர் குல்ஜித் சிங் தாக்ரா தெரிவித்தாலும், பிரதமரைத் தனிமைப்படுத்துவதுதான் டில்லி கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் எனப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா தரப்பினரால் இப்போது அரசியல் சுமையாகக் கருதப்படுகிறார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் முடிவடைந்து, புதிய வருடம் பிறந்த பிறகு பிரதமரை மாற்றுவது என்றும், அதன் மூலம் கட்சியின் மீதான களங்கமும் கெட்ட பெயரும் கணிசமாகக் குறையும் என்றும் காங்கிரஸ் தலைமை நம்புகிறது.

மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, ராகுல் காந்தியையோ, அவர் விரும்பாவிட்டால், ஏ.கே. அந்தோனி அல்லது எந்தவிதக் குற்றச்சாட்டுக்களிலும் சிக்காத ஒருவரையோ இடைக்கால பிரதமராக்குவது என்பதுதான் காங்கிரஸ் கட்சித் தலைமையின் திட்டம் என்று தெரிகிறது.

இதற்கிடையில் கட்சித் தலைமைக்கு ராகுல் காந்தியையும், பிரதமர் பதவி வேட்பாளராக பிரியங்கா காந்தியையும் முன்னிலைப்படுத்தினால் என்ன என்கிற யோசனையும் வைக்கப்படுகிறது.

அந்தோனியைப் பிரதமராக அறிவிப்பதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து அதிகமான எம்.பி. இடங்களைப் பெறுவதுடன் சிறுபான்மையினரின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது சோனியா காந்தியின் திட்டமாக இருக்கக் கூடும்.