கன்னட நடிகர் ஹர்ஷாவின் வீட்டுக்குள் புகுந்த 4 ஆயுதம் ஏந்திய நபர்கள் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கைளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஹர்ஷா. மேற்கு பெங்களூரில் உள்ள நாகர்பாவியில் அவர் தனது அப்பா பிரகாஷ், அம்மா விமலா மற்றும் உறவினர் ஒருவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பு முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு பைக்கில் வீட்டுக்கு வந்துள்ளார்.
பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திக் கொண்டிருந்தபோது அரிவாள் ஏந்தி முகமூடி அணிந்த 4 பேர் ஹர்ஷாவை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிக்குள் சென்ற உடன் அவர்கள் அங்கிருந்தவர்களை படுக்கையறையில் இருக்கும்படி கூறியுள்ளனர்.
இரண்டு பேர் ஹர்ஷாவின் குடும்பத்தாரை கண்காணிக்க மற்ற இரண்டு பேர் வீட்டில் இருந்த 1 லட்சம் பணம், நகை, வெள்ளிப் பொருட்கள், கைப்பேசிகளை திருடினர். அவற்றின் மதிப்பு 8 லட்சம் ஆகும்.
அவர்கள் திருடிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். விமலாவின் கைப்பேசி மேஜையில் துணிக்கு அடியில் இருந்ததால் அதை அவர்கள் பார்க்கவில்லை. இதையடுத்து அந்த கைப்பேசி மூலம் அக்கம்பக்கத்தினரை அழைக்க அவர்கள் வந்து சாவியை தேடி வீட்டைத் திறந்தனர்.
இந்த சம்பவம் பற்றி பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹர்ஷாவின் குடும்பத்திற்கு தெரிந்த யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.





