தூத்துக்குடி மாவட்டத்தில் மது அருந்திவிட்டு குடிவெறியில் தாலி கட்ட வந்த மாப்பிள்ளையால் திருமணம் நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராணி(25). இவருக்கும் தூத்துக்குடி எம்.திரவியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அறிவழகன் என்ற ராமர் (27) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
வரதட்சணையாக 10 பவுன் நகையும், 25 ஆயிரம் பணமும் மணமகள் வீட்டில் கொடுத்திருந்தனர்.
மணமகள் வீட்டில் நேற்று காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் திருமணம் நடைபெற இருந்தது. பெண் வீட்டிற்கு காலை 8 மணிக்கு வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. ஒருவழியாக காலை 11 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் இரு வேன்களில் வந்திறங்கினர்.
அப்போது குடிவெறியில் தள்ளாடிய மாப்பிள்ளையை 3 பேர், கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்தனர். உடனே மணப்பந்தலில் அவரை அழைத்து அமர வைத்தனர். ஆயினும் குடிவெறியில் இருந்த அவர் அமர முடியாமல் கீழே விழுந்தார்.
இதைப் பார்த்த மணப்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக கூறிய பெண் வீட்டார் 25 ஆயிரம் மற்றும் திருமண செலவு 35 ஆயிரம் சேர்த்து 60 ஆயிரம் தரவேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு மாப்பிள்ளை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து அவசரப்பட வேண்டாம். மாப்பிள்ளைக்கு போதை தெளிந்ததும் தாலி கட்ட சொல்கிறோம் என வாக்குவாதம் செய்தனர்.
இதனால் மேலும் பிரச்சனை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொலிசார் இரு வீட்டாருக்கும் இடையில் பேச்சுவார்தை நடத்தியதில் மாப்பிள்ளை வீட்டார் பணம் தருவதாக தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர்களது உறவினர்களிடம் 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் வாங்கப்பட்டது. 60 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு நகைகளை வாங்கி செல்லலாம் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.





