டிசம்பர் மாத ராசி பலன் – தனுசு!!

483

thanusu

கோபுரமாக உயரவேண்டு மென்றால் அஸ்திவாரமாய் அடங்கினால்தான் முடியுமென்பதை அறிந்த நீங்கள், சில நேரங்களில் சிலரிடம் வணங்காமுடியாய் நிற்பீர்கள். சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டிலேயே நிற்பதால் சமயோஜிதமாகவும், இங்கிதமாகவும் பேசி பல முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆனாலும் சுக்கிரன் உங்களுடைய 6ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். 12ம் வீட்டில் கடந்த ஒருமாத காலமாக அமர்ந்திருந்து உங்களுடைய தூக்கத்தை குறைத்த சூரியன் இப்போது உங்கள் ராசியிலேயே நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி வரக்கூடும்.

அதிக உஷ்ணத்தால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வந்து நீங்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி உங்களுடைய புதுத் திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பார். உங்களுடைய ராசிநாதனான குரு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். யோகாதிபதிகளான குருவும், செவ்வாயும் பரஸ்பரம் கேந்திர பலம் பெற்று குருமங்கலயோகத்தோடு இருப்பதால் உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். உங்களின் அறிவுப்பூர்வமான, சாதூர்யமான பேச்சைக் கேட்டு சகாக்கள் மகிழ்வார்கள்.

பெரிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். மாணவர்கள் நினைவாற்றல் கூடும். படிப்பில் முன்னேறுவீர்கள். வகுப்பாசிரியர், சக மாணவர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விளையாட்டு, கலைப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள் உங்களின் புதிய திட்டங்கள் நிறைவேறும். முன்கோபம் குறையும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சனியும், ராகுவும் லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் லாபம் பெருகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வேலையாட்கள் உங்களுடைய அருமையைப் புரிந்து கொள்வார்கள்.

கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல், லெதர் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்பும், பதவியும் தேடி வரும். கலைத்துறையினர் உங்களுடைய படைப்புகள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

பெரிய வாய்ப்புகளும் கூடி வரும். விவசாயிகள் எலித் தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தன்னிச்சையான முடிவுகளாலும், விரைந்து செயல்படுவதாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 17, 26, 27, 28
ஜனவரி : 3, 4, 5, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள் : டிசம்பர் 20, 21 மற்றும் 22ம் திகதி காலை 11 மணி வரை வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.

பரிகாரம் : உங்கள் வீட்டிற்கோ அல்லது ஊருக்கு அருகிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்று வாருங்கள். முதியோர்களுக்கு செருப்பும், கம்பளிப் போர்வையும் வாங்கிக் கொடுங்கள்.