கச்சத்தீவு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் : ஜெ.ஜெயலலிதா!!

561

Jeyalalithaகச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர், பொலிஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று உரையாற்றுகையில்..

இலங்கையில் வாழும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட உள்நாட்டு போர் நமது மாநிலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு எந்த கவனமும் செலுத்தாமல் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறது.

இதே போல் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பாக் ஜலசந்தியில் மீன் பிடி உரிமை மறுக்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் 1974ம் ஆண்டில் இலங்கைக்கு இந்தியா கச்சத்தீவை தாரை வார்த்தது தான். கச்சத்தீவை திரும்ப பெறக் கோரி நான் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளேன்.

கச்சத்தீவை திரும்ப பெற கோரி தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவு வழக்கில் உயர் நீதிமன்றில் இருந்து நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.