இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில், தமிழகத்திலிருந்து ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.
திங்களன்று தேசிய முற்போகு திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக சிபிஐ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முன், டி ராஜா முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜெயலலிதா ராஜாவை தங்கள் கட்சி ஆதரிக்கும் என அறிவித்தார்.
மேலும் அஇஅதிமுகவின் ஐந்து வேட்பாளர்களில் ஒருவரான கு. தங்கமுத்து தனது வேட்புமனுவினை திரும்பப்பெறுவார் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி ராஜா
ஆக அஇஅதிமுக வேட்பாளர்கள் நால்வர், திமுகவின் கனிமொழி, சி பி ஐ -யின் ராஜா, மற்றும் தேமுதிகவின் இளங்கோவன் ஆக ஏழு போர் களமிறங்குகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி ஓர் இடத்தை வெல்ல 34 வாக்குகள் தேவைப்படும் அதன்படி அஇஅதிமுகவிற்கு சட்டமன்றத்தில் 151 உறுப்பினர்கள் இருப்பதால் அது நான்கு இடங்களில் வெல்லலாம்.
அஇஅதிமுகவிற்கு 15 வாக்குக்கள் உபரியாக இருக்கும்,
சிபிஐக்கு 8 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துவிட்ட சி பி எம் 10 உறுப்பினர்களும் உள்ளனர்.
தேமுதிக உறுப்பினர்கள் ஏழு பேர் அஇஅதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இராஜா வெற்றி பெறுவது எளிது எனக் கருதப்படுகிறது. ஆறாவது இடத்திற்குத்தான் திமுகவின் கனிமொழிக்கும் தேமுதிகவின் இளங்கோவனுக்குமிடையே கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
ஐந்து உறுப்பினர் கொண்ட காங்கிரஸ், மற்றும் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அஇஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றின் ஆதரவைப் பொறுத்தே முடிவு அமையக்கூடும் என நோக்கர்கள்.