அமெரிக்காவுக்காக உலக நாடுகள் பலவற்றை கனடா உளவு பார்த்தது என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தொலைக்காட்சியான சிபிசி வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம், கனடா தகவல் பாதுகாப்பு நிறுவனம் சுருக்கமாக சிஎஸ்இசி என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உளவு பார்க்க முடியாத சில விஷயங்களையும் கனடாவில் உளவு பார்க்கலாம், புவியியல் ரீதியாக கனடாவில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் அடிப்படையில் சிஎஸ்இசியுடன் இணைந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்எஸ்ஏ 20 நாடுகளை உளவு பார்த்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக தொடர்பை கொண்டுள்ள நாடுகளையே உளவு பார்த்துள்ளது. இந்நாட்டு தலைவர்களின் எண்ணம் என்ன, அவை எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேம்படுத்துகின்றன என்பது தொடர்பாகவும், பல்வேறு ரகசிய தகவல்களையும் திரட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே என்எஸ்ஏவில் உயரதிகாரியாக பணியாற்றிய தாமஸ் டிராக் கூறுகையில் 2010ம் ஆண்டு கனடாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, தலைவர்களின் பேச்சை முழுமையாக அமெரிக்கா ஒட்டு கேட்டுள்ளது. இதேபோல் ஜி8 நாடுகளின் தலைவர்களின் பேச்சையும் ஒட்டுக்கேட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஸ்னோடென் வெளியிட்டுள்ள தகவல்களால் உலகமே ஆட்டம்கண்டுள்ள நிலையில், சிபிசி தொலைக்காட்சியின் இத்தகவல்கள் அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.