சூடு பிடித்துள்ள கொழும்பு அரசியல் : கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை?

405

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு அரசியல் களம் என்பது மிகவும் பரபரப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளது. எனினும், ஜெனிவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது, அரசியல் அமைப்பை மீறி எந்தவொரு விடயங்களையும் செய்யப்போவதில்லை எனவும். ஜெனிவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அது இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தான் அவற்றை நிறைவேற்ற முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நீதிபதிகளுக்கு உள்நாட்டில் இடமே இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி இணை அனுசரணை வழங்கியுள்ள உடன்படிக்கை குறித்தும் எவ்வித பொறுப்பும் ஏற்கமுடியாது எனவும் கூறியிருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் இந்த கூற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,

“2015ம் ஆண்டில் வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கடந்த ஆண்டு பல முறை ஜனாதிபதி அரசியல் அமைப்பை மீறியதாகவும், அதனை கூட்டமைப்பினரே காப்பாறியதாகவும் எம்.ஏ.சுமந்திர் கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே, தற்போது கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். அத்துடன், இந்த உள்நாட்டு விவகாரம் சர்வதேச ரீதியில் தாக்கத்தை செலுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயத்தில் கடும் அதிருப்பியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதனை அவர்கள் வெளிக்காட்ட தயாராகி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன் வெளிப்பாடாகவே பிரதமர் மற்றும் ஜனாதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்புகளை நடத்தவிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

-தமிழ்வின்-