வவுனியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை கடுமையான சோதனையிடும் பொலிசார்!!

1391

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களினதும் புத்தகப்பையில் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு சோதனைக்குட்படுத்திய பின்னரே பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களின் மோட்டார் சைக்கில் மற்றும் அவர்களது பைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றையதினம் (06.05.2019) குறிப்பிட்ட வகுப்பினருக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இச் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இச் சோதனை நடவடிக்கையினை பாடசாலை சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதனை மேற்பார்வை செய்யும் முகமாக வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி ஆகியோர் அனைத்து பாடசாலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் நேற்றையதினம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.