தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது சமந்தா கடுமையாக சாடியுள்ளார். மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை நாய் போல் ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. போஸ்டர் வித்தியாசமாக இருப்பதாக பலரும் நின்று பார்த்து சென்றனர்.
மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்பதாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றின் போஸ்டரை பார்த்தேன். பிற்போக்குத் தனமானவர்கள் சிந்தனையில் உதித்த பிற்போக்குத்தனமான போஸ்டராக அது இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
மகேஷ்பாபு போஸ்டரைதான் அவர் குறை கூறி உள்ளார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர். இதையடுத்து சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்து மகேஷ்பாபு ரசிகர்கள் டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள மகேஷ்பாபு ரசிகர்கள் அனைவருமே சமந்தாவுக்கு எதிராக கொதித்து போய் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தயாராகி வருகிறார்கள். இதனால் போஸ்டர் பற்றிய கருத்தை டுவிட்டரில் இருந்து நீக்கி விடலாமா என்று சமந்தா யோசிக்கிறாராம்.





