நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56வது படமாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில் விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர் விஜய், ஜில்லா பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து கொண்டார். இவ்விழாவில் விஜய்யை வைத்து வசந்த வாசல் என்ற படத்தை தயாரித்த எம்.ராஜராம், ராஜாவின் பார்வையிலே படத்தை தயாரித்த எஸ்.சவுந்திரபாண்டியன், மின்சார கண்ணா படத்தை தயாரித்த ஆர்.சாந்தா கே.ஆர்.ஜி, ஒன்ஸ்மோர் படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், விஷ்ணு படத்தை தயாரித்த எம்.பாஸ்கர் அவருடைய மகன் பாலாஜி பிரபுவுக்கு தலா 5 லட்சம் வழங்கி கௌரவித்தார். மனிதநேய அடிப்படையில் இந்த பணத்தை விஜய் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்தது.
இந்த விழாவில் ஜில்லா படத்தின் ஓடியோவும் வெளியிடப்பட்டது. ஜில்லா படத்தின் ஓடியோ கசட்டுகள் நாளை மறுநாள் நேரடியாக கடைகளில் விற்பனையாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உதவி வழங்கும் விழாவின் ஒரு நிகழ்வாக ஜில்லா படத்தின் ஓடியோவையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





