பிரச்சினையை ஏற்படுத்திய ரஜினி பிறந்தநாள் பேனர்!!

559

Rajaniசூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில், பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஒட்டிய பேனர்களில் ஒன்று தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ரஜினி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வாக்குச்சாவடியில் நின்று ஓட்டுப் போடுவது போலவும், விஷ்ணுவும், விநாயகரும் வரிசையில் நிற்பது போன்று காட்சியமைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் தலைவா நீ அரசியலுக்கு வந்தால் கடவுளும் ஓட்டுப் போடுவான் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இந்த பேனர்தான் தற்போது பிரச்சினையை கிளப்பியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு முதல்வரின் தனிப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில், ரஜினியை அரசியல் கொண்டுவர அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வருகின்றனர்.

மதங்களை கொச்சைப்படுத்தி அவரை அரசியலுக்குள் கொண்டு வர ரசிகர்கள் என்றுமே முன்வரக்கூடாது. எனவே இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள்தான் ஒட்டினார்களா அல்லது அவரது வேண்டாதவர்கள் இந்த செயலை செய்தார்களா என கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.