முடிவுக்கு வராத இளம்பெண் கொலை வழக்கு : மேலும் ஒரு திருப்பம்!!

879

இளம்பெண் கொலை வழக்கு

கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர் அதற்குப்பின் வீடு திரும்பவில்லை. பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பொலிசார், மே மாதம் 10ஆம் திகதி கிரண்தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவரைக் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53) கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டார். தற்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹர்ஜோத் சிங் டியோவின் சகோதரியும் Manjit Kaur Deoவின் மகளுமான Inderdeep Kaur Deo, (23). இத்துடன் இந்த வழக்கு முடிவடைவதாக தெரியவில்லை, காரணம் பொலிசார் இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் தானாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசியின் கொலையுடன் தொடர்புடையதாக தாங்கள் கருதும், சாம்பல் நிற கார்கள் இரண்டின் உரிமையாளர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.