பார்வையற்ற நிலையில் ஒன்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் சிறையில் வாடும் இலங்கைத் தமிழர்!!

388

பார்வையற்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

குறித்த நபர் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2010ம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற குமார் என்ற இலங்கை அகதியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு செலும் போது அவருக்கு 27 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ள நிலையில், அண்மையில் விலாவூட் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று தெரிவித்துள்ளதாவது,

“ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. இந்நிலையில், குறித்த தமிழ் அகதி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அத்துடன், அவரிற்கு இழப்பீடு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் எனவும்” ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.