
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் குறித்த கல்லூரியின் பிரதி அதிபரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியமையால் மனரீதியாக பாதிக்கப்பட்டு பிரதி அதிபர் மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதிபர் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக ஓமந்தை பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதி அதிபர் தெரிவிக்கையில், ஓமந்தை மத்திய கல்லுரியில் நான் பிரதி அதிபராக கடமையாற்றுகின்றேன். சில ஆவணங்களுக்கு கையொப்பம் இடுமாறு பிரதி அதிபர் என்ற வகையில் அதிபர் என்னிடம் கேட்பார். அதன் விளக்கம் தெரியாது கையொப்பமிட நான் மறுத்து வந்தமையால் எனக்கும் அதிபருக்கும் இடையில் முரண்பாடு இருந்தது.
இது தொடர்பில் வவுனியா வடக்கு வலயக்கல்வி திணைக்களத்திடமும் தெரியப்படுத்தியுள்ளேன். பிரதி அதிபரான எனக்கு இரண்டாம் ஆண்டிற்கு கல்வி கற்பிக்குமாறு அதிபர் கோரியிருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை நான் பாடசாலைக்கு சென்றேன். பாடத்திட்டம், பாடக்குறிப்பு என்பவற்றை அதிபர் கோரினார். நான் பிரதி அதிபர் எனக்கு ஏன் பாடத்திட்டம் பாடக்குறிப்பு எனக் கேட்டேன். இதன்போது அவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வெளியில் செல்லுமாறு உயிர் அச்சுறுத்தல் விடுத்தார்.

அதிபரின் இந்த பேச்சை எதிர்பாராத நான் பாடசாலையில் இருந்து வெளியில் செல்லும் போதே மயக்கமுற்று விழுந்தேன். பின்னர் அங்கு நின்றவர்கள் என் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தி அவர்கள் என்னை வைத்தியசாலையில் அனுமதித்தனர். நான் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
இச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் பிரதி அதிபரான தாயாருக்கு என்ன நடந்தது என விளக்கம் கோரி அவரது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றமையால் அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
எமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றுபவர்களில் ஒரு பெண் உப அதிபரிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்கு தெரியும். இதனால் அதனை மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் இரண்டாம் ஆண்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து உப அதிபரின் மகன்கள் பாடசாலைக்குள் வந்து முரண்பட்டனர்.
எனது மேசையில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்தனர். அங்கிருந்த ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தக்கூடாது என அச்சுறுத்தினர்.
தமது தாய்க்கு மேல் மாடியில் சென்று கற்பிக்க முடியாது. எனவே அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் நாம் பொலிஸாருக்கு முறையிட்டதை அடுத்து பாடசாலைக்கு பொலிஸாரும் மற்றும் இராணுவ அதிகாரிகள் வருகை தந்து விசாரித்தனர். பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் திருமதி சுரேந்திரன் அன்னமலரிடம் கேட்ட போது, ஆசிரியர் முறையிட்டுள்ளது குறித்து அதிபர் ஆசிரியரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக அதிபரிடம் அறிக்கை கோரியிருந்தேன். இதுவரையில் வழங்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்தார்.




